அண்மையில் 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே மேடையில் இந்த நிகழ்வுக்காக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.
அந்த வீடியோவில் பேசிய பார்த்திபன், ''என் பிரியமானவர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம். 'மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன் இவ்வளவு அகங்காரம் தேவையா?' இதுபோன்று இன்று யூடியூப்பில் வைரலாக பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. தூக்கிப் போட்டது மைக் ஆனால் உடைந்தது என்னமோ என்னோட மனசு. நேற்றிலிருந்து அது சம்பந்தமான குழப்பம். அது சரியா தவறா? என்ன நடந்துகொண்டோம்... இது நடிப்பா? இல்ல வைரல் ஆக வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்படா? என்ற பேச்சு போகிறது. ஆனால் அது மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. வெறும் ஒரு சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டது என்பது மட்டுமில்லாமல் மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன் என்றவுடன் பரபரப்பாகிவிட்டது. என்ன நடந்தது தெரியல எனக்குள்ள ஏகப்பட்ட டென்ஷன். அங்கு நடந்த விஷயத்திற்காக நான் உடனே ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு மன்னிப்பு கேட்டு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தேன். ரோபோ சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஏனென்றால் இது எனக்குள் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. சில தவறுகள் நடக்கும் பொழுது பின்னோக்கி சென்று கரெக்ட் பண்ண முடியாது. நீங்களெல்லாம் பார்த்திருப்பீங்க நானே ஒரு சின்ன பையன் மாதிரி இறங்கி எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கும்போது அந்த கோபம் எழுவது நியாயமானது. இருந்தாலும் நியாயப்படுத்த விரும்பவில்லை. அந்த தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.