கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கடும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இன்று (12/04/2021) காலை புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழைக்கு டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டிருந்த கடலை நனைந்துள்ளது. அதேபோல, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வல்லாவரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் செயல்படும். இங்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை ஒவ்வொரு நாளும் லாரியில் ஏற்றி அழியாநிலை போன்ற பல ஊர்களிலும் உள்ள பாதுகாப்பான குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், தேர்தலுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சில மூட்டைகளை மட்டும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த நிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வெயில் அடித்துவந்த நிலையில், இன்று (12/04/2021) காலை மழை பெய்ததால், திறந்த வெளியில் இருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளது.
காலை 10.00 மணி வரை கொள்முதல் நிலையம் பகுதிக்கு எந்த ஒரு அதிகாரியும் வந்து நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபடவில்லை என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இதேபோல, பல ஊர்களிலும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
மழை தொடர்ந்தால் இரண்டு நாட்களில் மூட்டைகளில் உள்ள நெல் பயிர் முளைத்து விடக் கூடிய சூழல் உருவாகிவிடும். அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுப் பணமும், விவசாயிகளின் வியர்வையில் விளைந்த நெல்மணிகளும் வீணாகி வருவது வேதனைக்குரியது.
வல்லவாரி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 50 நாட்களுக்கு முன்பு நாகுடி பகுதி விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட சுமார் 500- க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவிகின்றனர்.