காலங்கள் மாற மாற கலாச்சாரங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பல இடங்களில் மரபுகளை மாற்ற முடியாது என்று வாழையடி வாழையாக சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அப்படி ஒரு மரபு மாறாத நிகழ்வு குடுமியான்மலையில் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மேற்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது குடுமியான்மலை. தொடக்கத்தில் குன்றியூர், திருநக்குன்று என்றும் இருந்த ஊர் பிறகு குடுமியான்மலையானது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அகிலாண்டேஸ்வரி உடனுறை சிகாகிரீஸ்வரர் கோயில் உள்ளது. முற்காலப் பாண்டியர்களால் அவர்களுக்கே உரித்தான சதுர வடிவ ஆவுடையுடன் பிரமாண்ட லிங்கத்தை மலையில் குடைந்து அமைத்திருக்கிறார்கள். பிறகு வந்த முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர் மருமகள் (முத்தரையர் மகள்), குலோத்துங்கன், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை வானர்கள், வானதிரையர்கள், நாயக்கர்கள், தொண்டைமான்கள் எனப் பலரும் திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகளும் உள்ளது. தொண்டைமான் மன்னர்கள் முடிசூடும் இடமாகவும் இது இருந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், இசை மண்டபம் எனப் பல கலைப் பொக்கிஷங்கள் உள்ளன.
பிற்காலத்தில் படையெடுப்பில் அழகிய சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. மலையின் அடியில் குடைவரைக் கோயிலை ஒட்டி மலையிலேயே விநாயகர் சிற்பம் பொறிக்கப்பட்டு, அதன் அருகில் இசை மொழி (கிரந்தம்) கல்வெட்டுகளும் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த தளத்திற்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகையோ மிகக் குறைவாகவே உள்ளது.
இத்தனை சிறப்பு மிக்க கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க உருவம்பட்டி, காட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர். ஒரு நாளைக்கு 12 பேர் வீதம் இரவு பகலாக மெய்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இவர்களுக்கு விவசாய நிலம் கொடுத்திருக்கிறார்கள். பிறகு மாதம் ரூ.100 சம்பளம் தான். பல வருடங்களாக இது தான் சம்பளம்.
இது குறித்து காவல் பணியிலிருந்தவர்கள் கூறும் போது, "எங்கள் முன்னோர்கள் பாதுகாத்த இந்த பொக்கிஷங்களை இப்போது நாங்கள் காவல் காக்கிறோம். எங்களுக்கு பிறகு எங்கள் பிள்ளைகள் காவல் பணி செய்வார்கள். இரவில் 12 பேரும் கம்புகளோடு கோயில் முழுவதும் ஆங்காங்கே பணியில் இருப்போம். பகலில் நிர்வாகிகள் இருவர் பணி செய்வார்கள். எந்த வேலை என்றாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு காவல் பணிக்கு வந்துவிடுவோம்.
ஆனால், இத்தனை பொக்கிஷங்களையும் காலங்காலமாய் பாதுகாக்கும் எங்களுக்கு பல வருடமாக ரூபாய் 100 தான் சம்பளம். ஒரு நாள் செலவுக்குக் கூட பற்றாத சம்பளம் தான். ஆனால் கடவுள் பணி நமக்கு கிடைத்திருப்பதாக நினைத்து காவல் பணி செய்கிறோம். இனி மேலாவது எங்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றனர்.