கரோனா தொற்றின் அதிவேக பரவலையடுத்து, ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக அனைத்து அரசு மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்ததால் கடலூர் பகுதி மது அருந்துவோர் சிலர் புதுச்சேரி மாநில எல்லைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு மது அருந்தச் சென்றனர்.
அதையடுத்து கடலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான ஆல்பேட்டை, உண்ணமலைசெட்டி சாவடி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கார், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் விசாரணை செய்த பிறகே அனுமதித்தனர். அதே சமயம் சைக்கிள்களிலும், நடந்து சென்றவர்களையும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால், மது அருந்துவோர் நடந்து சென்று புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியில் உள்ள மதுக்கடைகளில் மது அருந்தி வந்தனர்.
இந்நிலையில் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பத்மா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வண்டிப்பாளையம் அங்காளம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரது உடலில் சாராய பாக்கெட்டுகளை மாலைபோல் கழுத்தில் தொங்க விட்டு கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை விசாரித்ததில் அவர் கடலூரைச் சேர்ந்த மணிகண்டன்(36) என்பதும் புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, ரூபாய் 1,200 மதிப்புள்ள 40 சாராய பாக்கெட்டுகளை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக புதுச்சேரி பகுதியில் இருந்து வருபவர்களை கண்காணித்த நிலையிலும் அனைத்தையும் மீறி புதுச்சேரியிலிருந்து சாராயத்தை மணிகண்டன் கடத்திவந்தது மதுவிலக்கு போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.