Skip to main content

புதுச்சேரி: மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
புதுச்சேரி: மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்



மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு பொது செயலாளர் இரா.முருகானந்தம் தலைமை தாங்கினார். தலைவர் ஆர்.வி.லெனின், ஆலோசகர் முத்துக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ், மனோகரன், எத்திராஜ், செல்வம், காமராஜ், கோபால், சண்முகம், குணபூஷணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் டிசம்பர் 2-ஆம் தேதி போபால் நினைவு தினத்தை முன்னிட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் மாநில உரிமைகளை பறிக்கும் செயலிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத பா.ஜ.க. துணை நிலை ஆளுனர் மூலம் ஆட்சிநடத்தி வருகிறது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில உரிமைகள் என்ற தலைப்பில் பொது உரையாடல் நடத்துவது.
  
காங்கிரஸ் அரசு எப்போதும் இல்லாத வகையில் குடிநீர் வரி, சொத்துவரி ஆகியவைகளை அதிகளவு உயர்த்தியிருப்பதுடன், புதியதாக குப்பைக்கும் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறது.
 
போபாலில் ஏற்பட்டதைப்போல் தொழிற்சாலைகளில் விஷவாயு உருவாகி நாட்டில் எங்கும் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அதுபோன்ற தொழிற்சாலைகளை ஆபத்து விளைவிக்கும் தொழிற்சாலைகளாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், புதுச்சேரியில் விஷவாயுவை உருவாக்கும் பல தொழிற்சாலைகள் எந்தவித எச்சரிக்கையும், தடையும் இன்றி இயங்கி வருகின்றன. எனவே, உடனடியாக இந்த தொழிற்சாலைகளை அடையாளம் கண்டு புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசுத்துறை நிறுவனங்களில் இதுவரை பாண்லேவில் மட்டுமே ஏழாவது ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது அங்கு பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே பயனாக உள்ளது. அதேசமயம், அங்கு பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே குறைவான சம்பளம் பெற்று வருபவர்கள் அதே இடத்தில் நீடிக்க, அதிகம் சம்பளம் பெற்றுவந்தவர்கள் மேலும் அதிக சம்பளம் கிடைக்க அரசு வழி செய்து, ஊழியர்களுக்கிடையில் மோதல், போட்டி, பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்திய தற்காலிக ஊழியர்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்திய அரசை கண்டிக்கிறோம்.  
உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

- சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்