புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்தது எப்படி? என புதுச்சேரி பாஜகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரியில் பாஜக சார்பில், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று, தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து, அதன் வழியாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது குறித்து, சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளித்தது. மேலும், வாக்களர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்ய பாஜகவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும், அனுமதிப் பெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு பாஜகவிற்கு மார்ச் 7இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 8இல் விண்ணப்பித்ததாக பாஜக தரப்பில் சொல்வது போல எந்த விண்ணப்பமும் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சைபர் கிரைம் விசாரித்து வருவதாகவும், அதன் அறிக்கையைப் பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதிசெய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று (02/04/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என்றும், ஆதார் தகவல்கள் கசியவில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பாஜக அளித்த விளக்கத்தை நிராகரித்துள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதுசம்பந்தமான முழுமையான விசாரணை அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்று தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார். அதேபோல, ஏஜெண்ட்கள் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பிய வகையில் 4.3 லட்சம் ரூபாய் செலவழித்ததாகவும், பாஜகவின் வேட்பாளர்களின் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாஜக. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியினர் மூலம் சேகரிக்கப்பட்ட மொபைல் எண்களை ஏஜென்சிகளுக்கு அளித்து, அதன் மூலம் பிரச்சாரம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார். பாஜக தரப்பு பதில் மனு தங்களுக்கு நேற்று (02/04/2021) காலைதான் கிடைத்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கையைத் தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்தனர்.
முன்னதாக,தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியது எப்படி என புதுவை பாஜகவுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை மக்கள் நேர்மையாக, நியாயமாக செலுத்த அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
பல பிரச்னைகள் இருந்தபோதும், நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், நம்பகத்தன்மை இழந்தால் உலக நாடுகள் மத்தியில் நம் நாட்டின் மதிப்பு வீழ்ந்துவிடும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.