கரோனா விடுமுறைக் காலத்தை மாணவர்கள் பயனுள்ள முறையில் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் செல்போன்களில் சிக்கிக் கொண்டாலும் கூட நிறைய மாணவர்கள் விடுமுறையைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தியுள்ளனர். விடுமுறை நாட்களை அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களைப் பயனுள்ள செயல் செய்ய வலியுறுத்தியும் வழிகாட்டியும் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பரசன் கரோனா விடுமுறை நாட்களில் தனது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி பல பள்ளி மாணவர்களுக்கும் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வருவாய் வழி தேசிய திறனாய்வுத் தேர்வுக்குப் பயிற்சி கொடுத்த பலரைத் தேர்ச்சி பெறச் செய்துள்ளார்.
அதே போலத் தான் அறந்தாங்கி அருகில் உள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் விடுமுறை நாட்களைப் பயனுள்ள சமூக அக்கறையுள்ள செயலுக்காக மாற்ற நினைத்து விதைப் பந்து தயாரிக்கும் போட்டியை அறிவித்து அதிகமான விதைப்பந்துகளை தயாரிக்கும் மாணவருக்குப் பரிசும் வழங்குவதாக அறிவித்தனர்.
போட்டியின் முடிவில் 25,320 விதைப்பந்துகளைத் தயாரித்துச் சாதித்துள்ளனர். அதில் லத்திகா என்ற மாணவி மட்டும் 2,800 விதைப்பந்துகளைத் தயாரித்து முதல் பரிசை பெற்றார். விதைப்பந்து திருவிழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசுகளையும் வழங்கினார்.
அதிகமான விதைப்பந்துகளைத் தயாரித்து பரிசாகப் பெற்ற ரூபாய் 500- ஐ அந்த மாணவி, பள்ளி வளர்ச்சி நிதிக்காக வழங்கியது அனைவரையும் நெகிழச் செய்தது. மாணவியை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் பாராட்டினார்கள். கடந்த வாரம் இதே பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி தனக்குக் கிடைத்த நல்லாசிரியருக்கான பரிசுத் தொகை ரூபாய் 10,001- ஐ பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.