கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் 'ரேபிட் டெஸ்டிங் கிட்’களை கொள்முதல் செய்வதற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரோனா தொற்றை கண்டறிய 37 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனிப்பட்ட முறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கிட் களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த கிட்கள் ஒன்பது இந்திய நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இதில் சீனாவைச் சேர்ந்த வொண்ட்ஃபோ நிறுவனமும் ஒன்று. இந்தக் கருவிகளை புனேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல், கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக்கூறி, அந்தக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்ததால் ரேபிட் டெஸ்டிங் கிட்-களைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தக் கருவிகளை தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.