எவ்வளவு படித்தாலும், எந்த உச்சத்தில் இருந்தாலும் வளர்த்தெடுத்த தொழிலையும், பாரம்பரியத்தையும் மறக்கக் கூடாது என்று கூறியபடியே தை பொங்கலுக்காக தந்தை வழியில் மண்பாண்டங்களை செய்து அசத்தி வருகிறார் பேராசிரியர் ஒருவர்.
மண்பானை செய்யும் பேராசிரியரை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, தமிழர் திருநாள் ஏன் கொண்டாடுகிறோம் என்பதை பார்ப்போம். தமிழர் திருநாளாம் தை பொங்கலை கொண்டாடாத தமிழினமே இருக்கமுடியாது. தமிழ் மக்கள் எத்தனையோ பண்டிகைகளை கொண்டாடினாலும், அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் திகழ்வதும், பாரம்பரியமிக்கதாகவும் இருப்பது பொங்கல் பண்டிகை. நான்கு நாட்களுக்கு பெரும் திருவிழாவை போலவே இன்றும் கிராமபுறங்களில் பொங்கல் பண்டிகை குதுகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும் தனது உழைப்பிற்கும் துணைநின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவே பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
தை முதல்நாள் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைவித்த நெல்லில் குத்தி எடுத்த பச்சரிசி பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை படைத்து நன்றி தெரிவிப்பார்கள். அரிசியைப் போலவே மண் பானைகளும் மண் சட்டிகளும் தவிர்க்க முடியாதது. புதிய மண்பானையில் அவரவர் வழக்கப்படி பொட்டு வைத்து அலங்கரித்து பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி சுபமான நேரத்தில் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி பொங்கல் வைப்பார்கள். பானையில் பால் பொங்கும் போது வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து ‘பொங்கலோ.. பொங்கல்’ என்று உரக்கச் சொல்லுவார்கள். அது, ஆயிரம் கவலைகளை மறக்கடிக்கச் செய்யும் விழாவாக அமையும்.
அதேபோல உழவர்களின் வாழ்வில் ஒன்றியே இருப்பது கால்நடைகள். கொட்டகை நிறம்ப மாடுகள் இருந்த இடத்தில் தற்போது டிராக்டர்கள் நிறுத்தப்பட்டு காட்சிபொருளாக இருக்கிறது என்பது வேறுகதை. ஆனாலும் ஏர் முனைக்கு முன்னேறி செல்லும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகும். இந்த பொங்கலிலும் அந்த மண் பானை தவிர்க்க முடியாததாக இருக்கும். நான்காவது நாளான கானும் பொங்கலிலும் மண்பானை தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும். விவசாயத்தைப் போலவே பண்பானை தொழிலும் நலிவுற்றுப்போனாலும் இந்த மண்ணோடும், மக்களோடும் ஒன்றியே இருக்கும் மண்பாபானை செய்யும் தொழிலை விடாமல் பொங்கல் வரவுக்காக ஆர்வமாக பாணை, சட்டிகளை செய்துவருகின்றனர்.
அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல், கிராமத்தில் தனியார் கல்லூரி உதவி பேராசிரியரான முனைவர் பாலசுப்பிரமணியம் தனது தந்தை வழியில் ஓய்வு நேரத்தில் மண்பாண்டம் செய்துவருகிறார். உதவி பேராசிரியராக பணியாற்றினாலும் கிடைக்கும் நேரத்தில் தனது பாரம்பரிய தொழிலான மண்பாண்டங்கள் செய்யும் தொழிலை மறக்காமல் செய்துவருவதை அப்பகுதி மக்களும், இளையதலைமுறையினரும் பாராட்டவே செய்கின்றனர்.
இதுகுறித்து முனைவர் பாலசுப்பிரமணியத்திடமே கேட்டோம், "நான் எம்.காம், எம்.ஃபில், பிஎச்டி படித்து முடித்து தற்போது ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வருகிறேன். இந்த தொழிலை நாங்கள் தாத்தா, தந்தை காலத்தில் இருந்தே தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். இந்தத் தொழில் எனது முன்னோர்களுடன் முடிந்து விடக்கூடாது என்கிற வகையில் மண்பாண்ட செய்யும் தொழிலை முறையாக கற்றுக்கொண்டு செய்து வருகிறேன். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களும் மண்பாண்டம் தொழில் செய்து வருகின்றனர். இந்த தொழில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம் அலுமினியம், பித்தளை பாத்திரங்கள் மூலம் நோய்பரவும் என்கிற அச்சமும் விழிப்புனர்வும் மக்களிடம் வந்துவிட்டது. ஆக பாரம்பரியத்தை மீண்டும் நவீன தலைமுறை தேடத் துவங்கிவிட்டது. அந்தவகையில் மண்பாண்ட பொருள்களை வாங்குகின்றனர். அரசு மண் எடுப்பதற்கு உரிய அனுமதி கொடுத்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும். வங்கியில் கடன் வாங்கும்போது ஜாமீன்தாரர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் கையெழுத்து வாங்க சொல்லி வற்புறுத்துகின்றனர். அதிகமாக படிக்காதவர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கியில் கடன் பெறுவதற்கு தளர்வுகளை விதித்தால் வசதியாக இருக்கும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.