மனிதவள மேலாண்மைத்துறைத் தொடர்பான, அறிவிப்புகளை தமிழக சட்டப்பேரவையில் வெளியிட்டார் நிதித்துறை அமைச்சரும், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். இந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம். விண்ணப்பத்தாரர்களின் சான்றிதழ் சரிபார்த்தல் போன்ற பணிகளையும் செயலி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் குழுமம் இணைக்கப்படும்.
கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்க தனியாக ஒரு சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேபோல், திருமங்கலத்தில் இருந்து முகப்பேர் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வரை நீட்டிக்க சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். பூவிருந்தவல்லி புறவழிச்சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.