நாமக்கல் அருகே, தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த தியாகு கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுவாதி(17) நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி, பிளஸ்2 படித்து வந்தார். ஜன.30ம் தேதி அதிகாலை வழக்கம்போல் பள்ளி வளாகத்தில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடந்தது.
இந்த வகுப்பிற்கு வந்திருந்த சுவாதி மீண்டும் தன்னுடைய விடுதி அறைக்குத் திரும்பினார். மற்ற மாணவிகள் வழக்கம்போல் காலையில் வகுப்புக்குச் சென்றுவிட்ட நிலையில் சுவாதி மட்டும் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகத்தின் பேரில் விடுதி ஊழியர்கள், சக மாணவிகள் சுவாதியின் அறைக்குச் சென்று பார்த்தனர். அறைக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, சுவாதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதைப் பார்த்த ஆசிரியர்கள், சக மாணவிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாணவி, எதனால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. அவர் தங்கியிருந்த அறையில் தற்கொலை குறிப்பு கடிதம் இருக்கிறதா என சோதனை நடந்து வருகிறது.
சக மாணவிகள், வகுப்பு ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பொதுத்தேர்வு மீதான அச்சத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? ஆசிரியர்களின் அழுத்தம் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, உடற்கூராய்வு முடிந்ததை அடுத்து மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை கிடைத்து விடும் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. தனியார் விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.