சில தினங்களுக்கு முன் குமரி மாவட்டம், கோட்டார் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வந்து செல்கின்றனர். இதில் சுமார் 800-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இருந்து உணவு கொடுத்தாலும் பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் கேன்டீனில் இருந்துதான் உணவு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அதேபோல். நோயாளிகளுடன் இருக்கும் அவர்களின் உதவியாளர்களும் அந்தக் கேன்டீனில் இருந்துதான் உணவு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
இந்த நிலையில் 5-ம் தேதி அங்குள்ள தனியார் கேன்டீனில் இருந்து மதியம் மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அந்தக் கேன்டீன் முன்னே சுருண்டு விழுந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயா் மகேஷ் உத்தரவின் பேரில் மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் ஜான் தலைமையில் அதிகாரிகள் அந்தத் தனியார் கேன்டீனில் தயார் செய்யப்பட்ட உணவை ஆய்வு செய்தனர்.
மேலும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தபோது சமையல் கூடம் சுகாதாரமின்றி கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. மேலும் துர்நாற்றம் வீசியதோடு கொசு புழுக்கள் காணப்பட்டன. அது போல் சமைத்த உணவுகள் எதையும் மூடாமலே திறந்து வைத்திருந்தனர். மேலும் தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அந்தக் கேன்டீனை பூட்டி சீல் வைத்தனா். அந்த கேன்டீனின் லைசன்சை ரத்து செய்து அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனா்.