திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாம் இயங்கி வருகிறது. இதில் ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தங்கி இருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, சூடான், பல்கேரியா, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 143 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர்கள் அன்பு, ஸ்ரீதேவி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் 6 காவல்துறை உதவி ஆணையர்கள், 14 ஆய்வாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குற்ற வழக்குகள் குறித்தும் அவர்கள் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 143 செல்போன்கள், 3 லேப்டாப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிறைவாசிகள் தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்புகளை திருப்பித் தரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயினும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் லேப்டாப்புகள் திருப்பித் தரப்படவில்லை. இந்த நிலையில் இன்று மதியம், 20க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப்புகளை திருப்பி தர கோரி அங்குள்ள மரம் ஒன்றில் ஏறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.