நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பள்ளி மாணவி ஒருவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, மாணவன் ஒருவனை மிரட்டிய வழக்கில் கைதானவர் வாகைக்குளம் கிராமத்தின் முத்து மனோ. ஸ்ரீவைகுண்டம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட முத்துமனோ நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அங்கே கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் விசாரணைக் கைதியான முத்துமனோ அடித்துக் கொல்லப்பட்டார்.
சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துக் கொலைச் சம்பவத்திற்குக் காரணமான சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முத்துமனோவின் உறவினர்கள் கடந்த 13 தினங்களாக ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் காரணமாக சிறை அதிகாரிகள், வார்டன்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கொலைச் சம்பவத்திற்குக் காரணமான சிறைக் கைதிகள் 7 பேர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முத்துமனோவின் சொந்தக் கிராமமான வாகைக்குளத்தில் தொடர்புடைய பாளை மத்திய சிறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். முத்துமனோ குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை, நிறுவனத் தலைவர் ராமர் பாண்டியன், மள்ளர் பேராயம் ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி மள்ளத்தி, தேவேந்திரகுல எழுச்சி இயக்கம் கண்ணபிரான் உட்பட முத்துமனோவின், உறவினர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிகாரிகள் தரப்பிலோ தற்போதைய சூழலில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நிவாரணப் பணிக்காக அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் போராட்டம் நீடித்த வண்ணமிருக்கிறது.