நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்றுதிரண்டு மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர். போராட்டத்தில் பல விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்தனர். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை போராட்டம் ஓயாது என அறிவித்து போராடிவந்தனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக பெரு முதலாளிகளின் நிறுவனங்களும்கூட முடக்கப்பட்டன. வடமாநிலங்களில் தேர்தல்வரும் சமயம் என்பதனால் மத்திய மோடி அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்த நிலையில்தான் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இந்தநிலையில், நாகையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கடந்த ஓராண்டாக விவசாயிகளின் போராட்டங்களைப் பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் அலட்சியம் செய்தார்கள்.
பஞ்சாப் விவசாயிகள் தலைமையில் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டம் பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களைப் பணியவைத்திருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகளோடு மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இப்போதுவரை மோடி சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை. வடஇந்திய விவசாயிகள் மிக வலிமையாக இருக்கிற காரணத்தால், தேர்தல் அரசியலுக்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார்” என்று தெரிவித்தார்.