தமிழகத்தில் ரூபாய் 31,400 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று (26/05/2022) சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஹைதராபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்று (26/05/2022) மாலை 05.45 மணிக்கு சென்னைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதைத் தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பிரதமர், ரூபாய் 2,900 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரூபாய் 28,500 கோடி மதிப்பிலான ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டி, டிரோன், ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 22,000 போலீசாருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.