தென்கடல் இலங்கைப் பகுதியில், மையம் கொண்டுள்ள 'புரெவி' புயல் இன்று மாலை அல்லது நள்ளிரவு குமரி முதல் பாம்பன் வரை கரையைக் கடக்கலாம். அதன் காரணமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் காற்று பலமாக வீசுவதுடன் அதிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தென்மாவட்டங்களின் புயல், மழை பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த, தென்பகுதியைத் துல்லியமாக அறிந்த நெல்லையின் முன்னாள் கலெக்டரும், தற்போதைய இணைச் செயலாளருமான கருணாகரன் ஐ.ஏ.எஸ்., அரசால் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 நாட்களுக்கு முன்பாகவே நெல்லை வந்த சிறப்பு அதிகாரி கருணாகரன் புயல் பேரிடர் தொடர்பாக அனைத்து அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தினார். வெள்ளம் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்தவருடன் நெல்லை கலெக்டர் விஷ்ணு உடனிருந்தார். அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புயல் தடுப்பு மையங்களை ஆய்வு செய்தவர், நாங்குநேரி, தெற்கு விஜய நாராயணம் பகுதி ஏரிகளையும், நீர் கொள்ளளவையும் ஆய்வு செய்தார்.
அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார். மேலும் அங்குள்ள புயல் தடுப்பு மையங்களிலுள்ள மக்களுக்கான வசதிகள், கழிப்பிட வசதிகள், தண்ணீர் போன்றவைகள் தயார் நிலையில் உள்ளதையும் கவனித்தார். கூடுதல் வசதிக்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார். தாமிரபரணியின் வெள்ளப் பெருக்கெடுக்கும் அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளை மணிக்கு ஒரு முறை என 24 மணி நேரமும் கண்காணிக்கப் பொதுப் பணி துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், தூத்துக்குடியின் முக்கியப் பகுதிகளில் தண்டோரா மூலம் பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. புயல்மழை வெள்ளம் சம்பந்தமான ஏற்பாடுகளை நெல்லை மாவட்டத்தின் கலெக்டர் நல்லமுறையில் செய்துள்ளார். கடலோரப் புயல் பாதுகாப்பு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 195 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக் குழுவினர் 57 பேர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்கான கூடுதல் மருந்து வசதிகள் தயார் நிலையில் உள்ளன. போலீசார், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். அவசரக் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக அரசு அலுவலர்கள் யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம் என்றார் சிறப்பு அதிகாரி. கருணாகரன் ஐ.ஏ.எஸ்.