தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது. நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிந்தது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மொத்தமாக ஏழு சுற்றுக்கள் நடைபெற்றது. 7 சுற்றின் முடிவில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மதுரை மாவட்டம் பொதும்பை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழரசன், ராமச்சந்திரன் என்ற இருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''இதுவரை எத்தனை மாடுகள் பிடித்துள்ளேன் என்று அவர்கள் சொல்லவில்லை. என் கணக்குப்படி நான் இருபத்தொரு மாடுகளை பிடித்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மூன்றாவது முறையாக நான் முதல் இடம் வந்தது மகிழ்ச்சி. மாடுபிடி வீரர்களுக்கு சவாலாக இருந்தது. போன வருஷம் ஒவ்வொரு ஊர்லயும் அடைக்கிற காளைகளை அப்படியே கொண்டு வருவாங்க. அவனியாபுரத்தில் நடந்தபின் அடுத்தது பாலமேட்டில் நடக்கும். அப்பொழுது மாடு சோர்வடைந்து இருக்கும். ஆனால் இந்த வருடம் ஆன்லைன் மூலமாக செய்ததால் ஆளாளுக்கு பிரித்துக் கொண்டார்கள். எனவே மாடுகள் எல்லாம் ஃபுல் எனர்ஜியில்தான் இருந்தது. எனவே மாடுகளை பிடிப்பது சிரமமாக இருந்தது.
ஆன்லைன் பதிவு ஈசியாக இல்லை. ரொம்ப கடுமையாக இருந்தது. நான் டிரைவராக வேலை செஞ்சிட்டு இருக்கேன். நான் போன வருஷமே சொன்னேன் அரசு வேலை கொடுத்தா நல்லா இருக்கும்னு. இந்த தடவை அரசு வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். முதல்வர் ஒரு முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுவேலை கொடுத்தால் நல்லா இருக்கும். இந்த தடவை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் பார்ப்போம். மாடுபிடி வீரர்களை அங்கீகரிக்க வேண்டுமென நினைக்கிறேன். எல்லோரும் நினைக்கிறார்கள் மாடுகளை பிடிப்பது காலி பசங்கன்னு. இது காலி பசங்க பிடிக்கிறது கிடையாது. இதுக்குள்ள போனா நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதற்காகதான் இந்த அரசு வேலையை கேட்கிறோம். தமிழர் வீரத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். கொடுத்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்'' என்றார்.