/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/peop32323.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதிக்குட்பட்ட பாசார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது கோழிப்பண்ணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகனான கணேசன் (வயது 42) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜனவரி 23- ஆம் தேதி பண்ணை உரிமையாளர் நாகராஜ், கணேசன் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன கணேசனின் மகன் மற்றும் அவரது உறவினர்கள், கணேசனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரில் தனது தந்தை கணேசனுக்கும் அவர் பணி செய்த கோழிபண்ணை உரிமையாளருக்கும், சம்பள பிரச்சினை இருந்து வந்துள்ளதாகவும், இந்த மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வருவதாகவும் கூறியிருந்த நிலையில், தனது தந்தை கணேசன் இறந்திருப்பதல் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார்.
இப்புகார் குறித்து வேப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் குற்றவாளியை கைது செய்யவில்லை எனவும், இறந்தவர் உடலை முன்டியம்பாக்கம் அனுப்பி வைத்த காவல்துறையினர், அச்செய்தியை கணேசன் குடும்பத்தினருக்கு தெரிவிக்காததால், குற்றத்தை மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக புகார் கூறுகின்றனர்.
அதையடுத்து காவல்துறையை கண்டித்தும், நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், பா.ம.க.வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக்கேயன் தலைமையில் 100- க்கும் மேற்பட்டோர் வேப்பூர்- விருத்தாசலம் சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சிவா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இறந்துபோன கணேசனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும் போது, வீடியோ பதிவு எடுக்க வேண்டும். உறவினர்கள் உடற்கூறு ஆய்வின் உடனிருக்க வேண்டும். இறந்துபோன கணேசனுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர்.
இச்சம்பவத்தால் விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)