சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு சசிகலா தமிழகம் வருவார் என டி.டி.வி.தினகரன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட, போஸ்டர், பேனர் வைத்த அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் விருதுநகரில் சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “தொண்டர்களைக் காக்க வருகைதரும் தியாகத் தலைவியே”, “அதிமுக பொதுச்செயலாளரே” என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
சசிகலா வரும் 8-ஆம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில் இன்று (06.02.2021) மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.