'Polyester' dress Incident in thoothukudi

தூத்துக்குடியில் கோவிலில் சாமிகும்பிடச் சென்ற சிறுமி தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது ஜமீன்செங்கப்படை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். வேல்முருகன்-மதிவதனா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தெய்வ வெனுசுயா (6வயது). கடந்த 21-ந் தேதி தெய்வ வெனுசுயா வீட்டின் அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அக்கோவிலுக்கு அண்மையில்தான் குடமுழுக்கு நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், தினமும் அகல் விளக்கு ஏற்றும் வழக்கம் இருந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் சிறுமி தெய்வ வெனுசுயா விளையாடிக்கொண்டிருக்கும் போது கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருநீறுபூசுவதற்காகக் குனிந்துள்ளார். அப்போது அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கு சிறுமியின் ஆடையின் மீது பட்டது. இதனால் மளமளவென உடல் முழுவதும் தீ பரவியது. எரிந்த நிலையிலேயே சிறுமி வீட்டிற்கு அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளார். சிறுமி அணிந்திருந்தது பாலிஸ்டர் ஆடை என்பதால் எளிதில் பற்றிய தீ உடல் முழுவதும் பரவி பிளாஸ்டிக் போல் ஒட்டிக் கொண்டது. தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. சிறுமியின் தாய் மதிவதனா தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக சிறுமி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு முதலுதவி சிகிச்சை மட்டுமேஅளிக்க முடிந்தது. மேல்சிகிச்சைக்காகத்தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறுதியில் சிறுமி உயிரிழந்தார். துருதுருவென ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.