Skip to main content

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்- மேலும் ஒருவர் கைது!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

 

pollachi incident one more person arrested in cbi


கடந்த 2019- ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

பின்னர் இந்த வழக்கு விசாரணையானது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கை தினசரி விசாரித்து ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் பெயர் அருண்குமார். இவர் பொள்ளாச்சி சூரம்பாளையத்தைச் சேர்ந்தவர். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ளார். அவரின் தந்தை ஆட்டோ டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.  

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சதீஷின் நெருங்கிய நண்பர் அருண்குமார். சதீஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அவரை கைது செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, அருண்குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

 

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“வளர்ச்சித் திட்டங்கள் கிடைத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” - எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Vote for admk to get development plans Edappadi Palaniswami campaign

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து வரக்கூடிய நமக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு, தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி கிடைக்க, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி கிடைக்க, சுதந்திரமாக நாடாளுமன்றத்தில் பேசி மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதிமுக யாரையும் நம்பாமல் சொந்த காலில் நிற்கிறோம். மத்தியில் திமுக அரசு 17 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து காப்பாற்றியது. ஆனால் தற்போது ஏற்பட்ட சிறிய புயலுக்கே திமுக அரசு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவில்லை. நிதியை முறையாக கேட்டு பெறுவது மாநில அரசின் கடமையாகும். ஒவ்வொரு முறையும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அரசு முறையாக ஆட்சி செய்யவில்லை.

இந்த ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்ற வெகு நாட்கள் இல்லை. அதிமுக விரைவில் ஆட்சியை அமைக்கும். திமுக அரசை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர் நகருக்கு அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது தான் துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோன்று காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.  இதேபோன்று எண்ணற்ற நலத்திட்டங்கள் முசிறி, மண்ணச்சநல்லூர் சமயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது .

எனவே உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி மற்றும் அதிமுக கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.