தமிழகத்தின் 16வது சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த் துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுச் சுவர்களில் வரையப்பட்டுள்ள கட்சிகளின் சின்னங்கள், பெயர்கள், போஸ்டர்கள் போன்றவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உட்பட பலவற்றில் எழுதப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகின்றன.
இதுதொடர்பான அறிவுரை கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், அதிமுக பிரமுகர் ஒருவர், என்னுடைய ஸ்வீட் கடையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். படத்தோடு கடை பெயரை வைத்துள்ளேன். அதனை எடுக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்ப, நிச்சயம் எடுக்க வேண்டும் என்றார். அரசியல் கட்சித் தலைவர்கள் பெயரோ, படமோ இருக்கக்கூடாது, மீறியிருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றார்.
மேலும் நாம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம், நடிகர் விஜயகாந்த், கமல், சரத்குமார், சீமான் போன்றவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களாக உள்ளார்கள். இப்போது, அவர்கள் நடித்த படம், இயக்கிய படங்கள் திரையரங்கில் வெளியாகிறது. அதற்கான போஸ்டர்ளை ஒட்டலாமா எனக் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் நடிகர்களாக இருந்தாலும் இப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள். அதனால், தேர்தல் விதிகள் அனைத்தும் அவர்களுக்குப் பொருந்தும். அதனால், அவர்களின் படங்கள் வெளிவருவதற்குத் தடையுள்ளது. போஸ்டர்கள் ஒட்டினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.