சேலத்தில், காவல்நிலையத்தில் மோதிக்கொண்ட பெண் எஸ்.ஐ. மற்றும் பெண் காவலர் ஆகிய இருவரும் வெவ்வேறு சப்டிவிஷன்களுக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருபவர் மல்லிகா (வயது 49). இதே, காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலாக சசிகலா (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2021- ஆம் ஆண்டு, குறிப்பிட்ட ஒரு பணியில் இல்லாத எஸ்.ஐ. மல்லிகா, வாழப்பாடி டி.எஸ்.பி. செல்போனில் அழைத்துக் கேட்டால் நீயும் நானும் சேலம் அரசு மருத்துவமனையில் பணியில் இருப்பதாக பொய் சொல்லும்படி சசிகலாவிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் சசிகலாவோ, தன்னிடம் செல்போனில் விசாரித்த அப்போதைய டி.எஸ்.பி. முத்துசாமியிடம், தான் இரவுப்பணி முடிந்து அதிகாலை 02.30 மணியளவில் வீட்டுக்கு வந்து விட்டதாகவும், தான் தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதையறிந்த எஸ்.ஐ. மல்லிகா, தான் சொன்னபடி சொல்லாமல் எதற்காக வீட்டில் இருப்பதாகச் சொன்னீர்கள்? என்று கேட்டு அவரை கடிந்து கொண்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு அடுத்த நாள் நடந்த 'ரோல்கால்' அணிவகுப்பில், டி.எஸ்.பி. முத்துசாமி, அனைத்து காவலர்கள் முன்னிலையிலும் எஸ்.ஐ. மல்லிகாவை கடிந்து கொண்டுள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு, பெண் காவலர் சசிகலாவுக்கும், எஸ்.ஐ. மல்லிகாவுக்கும் மோதல் வலுத்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதையொட்டி, தொடர்ச்சியாக 2 நாள்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சசிகலா, சங்கீதா ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் சென்ட்ரி பணியில் இருந்த சக காவலரிடம் சொல்லிவிட்டு ஓய்வுக்குச் சென்று விட்டனர்.
ஆனால், தன்னிடம் சொல்லாமல் தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்று விட்டதாக சசிகலா மீது மட்டும், வாழப்பாடி டிஎஸ்பியிடம் மல்லிகா எஸ்.ஐ. புகார் அளித்தார். டிஎஸ்பியின் மிரட்டலுக்குப் பயந்து, அவர் சொன்னபடியே, தான் தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்று விட்டதாக சசிகலா விளக்கக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.
இச்சம்பவம் நடந்து முடிந்து மூன்று மாதம் கடந்த நிலையில் எஸ்ஐ மல்லிகா, காவலர் சசிகலா மீது மாவட்ட எஸ்பிக்கு கடந்த மே மாதம் ஒரு புகார் அறிக்கை அனுப்பி வைத்தார். அதன் மீது விளக்கம் கேட்டு, சசிகலாவுக்கு காவலர் நடத்தை விதிகள் பிரிவு 3 (அ) &ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மோதல் குறித்து, நக்கீரன் இணைய ஊடகத்தில் தொடர்ச்சியாக செய்தி வெளியானது. இந்நிலையில், எஸ்ஐ மல்லிகா, காவலர் சசிகலா ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் ஜூலை 5- ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எஸ்.ஐ. மல்லிகா, ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்திற்கும், காவலர் சசிகலா, சங்ககிரி காவல்நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ''ஒரு காவல்நிலையத்தில் மோதல் போக்கில் இருந்த இருவரும், வெவ்வேறு சப்டிவிஷன்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம் வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் பணியில் இருப்பது மொத்தமே நான்கு காவலர்கள்தான். அவர்களைக் கூட சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத ஆய்வாளர் தனலட்சுமியையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.
ஆய்வாளர் தனலட்சுமி, தன்னை மேடம் என்று அழைக்க வேண்டும் என மல்லிகா எஸ்.ஐ.யிடம் சொன்னபோது, அப்படி அழைக்கும்படி அரசாணை இருந்தால் காட்டுங்கள் என்று கிண்டலாக கேட்டுள்ளார். அப்போதே மல்லிகா எஸ்ஐ மீது ரிப்போர்ட் செய்திருந்தால், இன்னொரு பெண் காவலர் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்,'' என்றனர்.
ஈகோ மோதலால் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த பெண் எஸ்.ஐ.யும், காவலரும் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், சேலம் மாவட்டக் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.