திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் முத்தையன், குளித்தலை - முசிறி இணைக்கும் பெரியார் பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பதும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா சப்ளை செய்துவந்ததும் தெரியவந்தது.
அதையடுத்து உதவி ஆய்வாளர் முத்தையா அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்ட வாலிபர் தினேஷ்குமார், எதிர்பாராத விதமாக அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். உடனடியாக மற்றவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், களத்தில் இறங்கியபோது காவலர்கள் முஸ்லிம் நகரின் பல்வேறு இடங்களில் வாலிபரைத் தேடி அவர் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்த காவல்துறையினர், காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.