Skip to main content

பிளாக்மார்க் தண்டனை பெற்ற தலைமைக் காவலருக்கு பதவி உயர்வு வழங்காதது சரியே!- உயர்நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

police promotion chennai high court judgement

 

 

பிளாக்மார்க் தண்டனை பெற்ற தலைமைக் காவலருக்கு பதவி உயர்வு வழங்காத சேலம் மாவட்ட காவல்துறையின் முடிவு சரியானது என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால். 1976- ஆம் ஆண்டு காவல்துறையில் 2- ஆம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்து, 1998- ஆம் ஆண்டு தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், 2008- ஆம் ஆண்டு,  சிறப்பு  சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கவேண்டியதை வழங்க, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மறுத்து உத்தரவிட்டுள்ளார்.

 

34 ஆண்டுகள் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கு உயர்அதிகாரிகளிடம் இருந்து 45 ரிவார்டுகளைப் பெற்றிருந்த போதும், கோபால் மீதான பிளாக்மார்க் தண்டனையைக் காரணம்காட்டி பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட காவல்துறையின் உத்தரவை ரத்து செய்து, தனக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கக் கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கில், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும் தலைமைக் காவலர்கள் எந்த குற்றச்சாட்டிலும் சிக்கியிருக்க கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை பணி விதிகள் உள்ளதை சுட்டிக்காட்டி, மனுதாரருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தீவிரமானது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

 

லஞ்சம் வாங்கிக்கொண்டு சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமும் உள்ளதால், கோபால் மீதான பிளாக்மார்க் தண்டனையும் ஒரு தண்டனைதான் என்பதால், பதவி உயர்வு வழங்க மறுத்த முடிவு சரியானது எனக் கூறி, கோபாலின் மனுவைத்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்