திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த மொழலை கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான திருமூர்த்தி. இவருடைய மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்கள் ஆகிறது. பிப்ரவரி 9ந்தேதி இரவு 11மணிக்கு மலையில் உள்ள ரங்கசமுத்திரத்தை சேரந்த காளியப்பன், உமாபதி மற்றும் சாந்திகாரகாளி இவர்களுடன் அடையாளம் தெரியாத 6 நபர்கள் திருமூர்த்தி வீட்டுக்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்து திருமூர்த்திக்கு கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மகேஸ்வரியை வீட்டில் இருந்து கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் மனைவியை மீட்டு தரக்கோரி திருமூர்த்தி புகார் தந்துள்ளார்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்த தூசி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் ரோஜா. 19 வயதான ரோஜா, காஞ்சிபுரத்தில் ஒரு துணிக்கடையில் வேலை செய்துவந்துள்ளார், அவர் காதலிக்கிறார் என தகவல் வர, பெற்றோர்கள் அவசரம் அவசரமாக அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிப்ரவரி 7ந்தேதி திருமணம் செய்துவைத்துள்ளனர்.
திருமணம் முடிந்ததும் திருப்பதிக்கு புதுமனதம்பதிகள், இரு குடும்பத்தார் சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடிந்து பிப்ரவரி 8ந்தேதி ஊருக்கு வந்துள்ளனர். 8ந்தேதி மாலை புதுப்பெண் காணாமல் போய்வுள்ளார். இதுக்குறித்து பெண்ணின் அப்பா தூசி காவல்நிலையத்தில் தந்துள்ள புகாரில், காஞ்சிபுரத்தில் துணிக்கடையில் பணியாற்றும் சுபாஷ் என்பவர் என் மகளை கடத்தியிருக்கலாம் என சந்தேகப்படுகிறேன் என புகார் தந்துள்ளனர்.
இருவரும் கடத்தப்பட்டார்களா?, கடத்தப்பட்டதாக சொல்லப்படுபவர்கள் ஏன் கத்தவில்லை? கடத்தப்பட்டார்கள் என்றால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் எப்படி, எதனால் தடுக்காமல் விட்டார்கள்? கத்தவில்லையென்றால் அவர்களாகவே போனார்களா என சந்தேகம் கிளப்பி புகார் தந்தவர்களிடம் துருவி துருவி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.