
ஆத்தூரில், பாதுகாப்புக்குச் சென்ற தலைமைக் காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய கைதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள காட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சக்கரவர்த்தி (25). நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் இவரை வேறு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்திருந்தனர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இந்திலியில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா உத்தரவின்பேரில், எஸ்ஐ சுப்ரமணியன் மற்றும் தலைமைக் காவலர்கள் முஸ்தபா, சிவராமன் ஆகியோர் ஜன. 23ம் தேதி நாமக்கல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சக்கரவர்த்தியைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அழைத்து வந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் வந்தபோது, சக்கரவர்த்தி தனக்கு அவசரமாக சிறுநீர் வருவதாக கூறினார். அதை நம்பிய காவல்துறையினர் அவரை பேருந்து நிலைய பின்புற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எஸ்ஐ சுப்ரமணியன், மற்றொரு கைதிக்குப் பாதுகாவலாக பேருந்து நிலையத்திலேயே இருந்தார்.
இதையடுத்து, பாதுகாப்புக்கு வந்த காவலர்களுள் ஒருவரான முஸ்தபாவை தாக்கிவிட்டு, சக்கரவர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை துரத்திப்பிடிக்க ஓடியபோது தலைமைக் காவலர் முஸ்தபா கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து மற்றொரு கைதியை, எஸ்ஐ சுப்ரமணியன் உடனடியாக சின்னசேலம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார். தப்பிச்சென்ற சக்கரவர்த்தியை பிடிக்க ஆத்தூர், சின்ன சேலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினர் ஜன. 26ம் தேதி அதிகாலையில் அங்கு சென்று சக்கரவர்த்தியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)