சமீபகாலமாக வேலியே பயிரை மேயும் கதையாக மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சிலர் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகள். அதேபோல் புகார் கொடுக்கும் பெண்களிடம் போலீசாரே எல்லை மீறும் சம்பவங்கள் என பத்திரிகை செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்தான் குமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து கருக்கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட களியக்காவிளை மேக்கோடு பகுதியை சேர்ந்த திருவனந்தபுரத்தில் நர்சாக பணிபுரியும் 32 வயதுடைய இளம் பெண் கூறும் போது, ''தன்னை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் உடமைகளை பறித்துசென்ற அந்த பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பவர் மீது புகார் கொடுக்க பளுகல் காவல் நிலையத்திற்கு சென்றபோது எனது புகாரை உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் (அவர் தற்போது வீரபாண்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார்) விசாரித்தார்.
மேலும் எனது பிரச்சனையை தீர்த்து வைப்பதாகவும் கூறி தினமும் செல்ஃபோனில் என்னிடம் தொடர்பில் இருந்தார். இந்த நிலையில் நான் ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டில் இருந்து அதன் உரிமையாளர் மாற சொன்னதால் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் அவர் நண்பர் மூலம் இளம்சிறை பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தந்தார். பின்னர் எனது புகார் மனு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வீட்டுக்கு வந்த சுந்தரலிங்கம் ஆசை வார்த்தை கூறி என்னை பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்ததையடுத்து அவரிடம் கூறினேன்.
உடனே அதற்கு அவர் என்னை மிரட்டி கருவைக் கலைக்க வலியுறுத்தினார். மேலும் அவருடைய நண்பர்களும் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று கருவைக் கலைத்து என்னுடைய எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கினார்கள். மேலும் என்னுடைய உடல் நிலையும் மோசமான நிலைக்குச் சென்றது.
இதையடுத்து நான் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையம், தக்கலை சரக துணை சூப்பிரண்ட், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து குழித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆய்வாளர் சுந்தரலிங்கம் மற்றும் உடந்தையாக இருந்த ஏட்டு கணேஷ்குமார் உட்பட 8 பேர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.