புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதும் அவ்வப்போது விழுப்புரம், கடலூர் மாவட்ட போலீசார் சோதனைச் சாவடிகளில் கடத்தல்காரர்களையும் சரக்குகளையும் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வெளி மாநில மது பாட்டில்கள், கஞ்சா போன்றவற்றைத் தடுக்கும் வகையில், நடமாடும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி புதுச்சேரியில் இருந்து கடத்தி வரும் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்யும் போலீசார், கடத்தல்காரர்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுடன் பிடிபட்ட மதுபாட்டில்களும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.
இந்த நிலையில், அப்படிப் பறிமுதல் செய்யப்படும் மதுபாட்டில்களைக் காவல்துறையினரே திருட்டுத்தனமாகக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங் சாய்க்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் போலீசாரிடம் தீவிரமாக கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் வாகன சோதனைப் பணியில் இருந்த காவல்துறை ஏட்டுகள் வினோத், முரளி, முத்தரசன் ஆகிய மூவரும் வாகனச் சோதனையின் போது சிக்கிய மதுபாட்டில்களைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவலர்கள் மூவரையும் சஸ்பெண்ட் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.