Skip to main content

வீடுகளுக்குச் செல்லும் போலீஸ்... இதுவும் ஒரு வகையான புதுமைதான்!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

Police going home in erode for investigation ...

 

ஈரோட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணி காக்கும் வகையில் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அந்தந்த காவல் நிலையம், டி.எஸ்.பி அலுவலகம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுக்கின்றனர். இதற்காக அவர்கள் மணிக்கணக்கில் போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் போலீசார் கூறும் நாட்களில் போலீஸ் நிலையத்திற்கு அலைய வேண்டி இருக்கிறது. 

 

இப்போது கரோனா வைரஸ் பரவல் காலம் என்பதால் பொதுமக்கள் தொழில் நிமித்தமாகவோ அல்லது பெரும்பாலும் அவசிய தேவைக்கு மட்டுமே வெளியே சென்று வருகிறார்கள். இந்த நிலையில்தான் புகார்தாரர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மனு கொடுக்க வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று போலீசார் விசாரித்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சமீபத்தில் தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டிருந்தார். 

 

அதன்படி, ஈரோடு எஸ்.பி தங்கதுரை ஈரோட்டில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 6ஆம் தேதி முதல் வீடுகளுக்கு நேரடியாக போலீசார் சென்று விசாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. குடும்பப் பிரச்சினை, பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சினை இது சம்பந்தமாக வரும் புகார்களை அந்தந்த போலீசார் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு அந்தப் பிரச்சினைக்கு அங்கேயே தீர்வு ஏற்படுத்துகின்றனர். முதல் நாளில் ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட டவுன் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் தாலுகா, சூரம்பட்டி உட்பட்ட பகுதியில் 15 க்கும் மேற்பட்ட புகார் மனுக்களுக்கு போலீசார் நேரடியாகச் சென்று விசாரித்து தீர்வு கண்டுள்ளனர். 

 

மனுக்களின் தன்மைக்கு ஏற்ப இன்ஸ்பெக்டரோ அல்லது சப்-இன்ஸ்பெக்டரோ நேரடியாகச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் உள்ளது. இதைப்போல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், போலீசார் புகார் அடிப்படையில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Ad

 

இதேபோல், நாமக்கல் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசனும் இத்திட்டத்தை தொடங்கினார். நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம் என மாவட்டம் முழுக்க உள்ள காவல் நிலைய போலீசார், பிரச்சனை எனத் தகவல் தரும் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் செல்கிறார்கள். இதுவும் ஒரு வகையான புதுமைதான்.

 

 

 

சார்ந்த செய்திகள்