
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை என அறிவித்தது மாவட்ட நிர்வாகம். திருவிழா பணியாளர்கள், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்திருந்தார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.
நவம்பர் 19ஆம் தேதி மாலை நடைபெற்ற மகா தீபத்தின்போது கோயிலுக்குள் சுமார் 3 ஆயிரம் பேர் உள்ளிருந்தனர். இவர்களுக்கான அடையாள அட்டையை கோவில் நிர்வாகம் வழங்கியிருந்தது. அதேநேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புக்காக உள்ளே குவித்துவைக்கப்பட்டிருந்தனர். கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, பின் எதற்காக இவ்வளவு போலீஸ் என்கிற கேள்வி தொலைக்காட்சியில் இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் கவனித்த பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
போலீஸ், அங்கிருந்த பிற துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுடன் வந்த அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு பதிலாக செல்போனில் செல்பி எடுப்பதும், வீடியோ – போட்டோ எடுப்பதுமாகவே இருந்தனர்.