கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள செம்மனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் தனது கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தனது குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்திற்கு சென்ற சந்தோஷ் குமார், மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் இல்லாததால் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகைப்படங்கள், செல்போன் எண்களை பதிவிட்டு தேடி வந்ததோடு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
அதேசமயம், சந்தோஷ்குமாரின் குடும்ப நண்பரான முருகன் சம்பவத்தன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்தவர், திடீரென அன்று இரவே செம்மணங்கூர் திரும்பியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த ஊர் மக்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் அவரிடம் இன்னும் தீவிரமாக விசாரித்துள்ளனர். மேலும், அவர் கைகளில் காயம் இருந்ததைக் கண்ட ஊர்மக்கள் அதுகுறித்து கேட்டபோது, தனக்கும் தன் தாய்க்கும் ஏற்பட்ட தகாராறில் அந்த காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். உடனடியாக ஊர் மக்கள் மக்கள் மற்றும் சந்தோஷின் உறவினர்கள் முருகனை அழைத்துகொண்டு அவரின் தாய் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது முருகனின் தாய், அவன் காலையில் இருந்து இங்கு வரவில்லை. மேலும், அவனுக்கும் எனக்கும் தகராறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் ஊர் மக்கள், முருகனை நேராக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முருகனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முருகன், “ஒரு வருடத்திற்கு முன்பு நான் கள்ளக்குறிச்சியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தபோது, சந்தோஷின் மனைவி சாந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அதன்பின் அங்கிருந்து அவர் சொந்த ஊரான செம்மணங்கூருக்கு என் காரில் வந்தார். அப்போது அவருக்கும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும், நாங்கள் அதிக நேரம் செல்போனில் பேசி பழகிவந்தோம். இந்தப் பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
அதன்பிறகு சந்தோஷ்குமார் சாந்தி தம்பதியரின் குடும்ப நண்பராக மாறினேன். முருகன் தன் கடைக்கு பொருட்கள் வாங்க வெளியூர்களுக்கு செல்லும் பொழுது, சாந்தியுடன் தனிமையில் இருந்துவந்தேன். ஊர் மக்கள் இது குறித்து சந்தேகம் அடையாமல் இருக்க சந்தோஷ்குமார் இருக்கும் பொழுது சாந்தியும், நானும் நட்பாக பேசி சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டோம். அதேசமயம், எங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் சந்தோஷ்குமாரை கொலை செய்ய நான் திட்டம் தீட்டினேன்.
நேற்றுமுன் தினம் சாந்தியிடம் எப்பொழுதும் போல் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரது கணவர் சந்தோஷ்குமார், உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக சாந்தி கூறினார். அதனைத் தொடர்ந்து உடனடியாக கள்ளக்குறிச்சியில் இருந்து எனது டாட்டா ஏசி வாகனத்தை எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை சென்று அங்கு சந்தோஷ் குமாரைச் சந்தித்தேன். நான் தற்செயலாக அவரைச் சந்தித்தது போல் அவரிடம் காட்டிக் கொண்டு அவருடன் சகஜமாக பேச்சு கொடுத்து ஏதாவது ஓட்டலுக்குச் சென்று சாப்பிடலாம் என்று கூறி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஓட்டலுக்கு செல்ல முடிவெடுத்து எனது வாகனத்தில் சந்தோஷ்குமாரை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி புறவழிச் சாலைக்கு வந்தேன்.
அங்கு சாப்பிட்டுவிட்டு, கள்ளக்குறிச்சியில் உள்ள எனது வீட்டில் யாரும் இல்லை; அங்கு சென்று இருவரும் மது அருந்திவிட்டு மீண்டும் வாகனத்தில் அழைத்து வந்து செம்மணங்கூரி விடுகிறேன் எனக்கூறி அழைத்துச் சென்றேன். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு மதுபான கடையில் மது வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்று மது அருந்தினோம். ஒரு கட்டத்தில் அவர் போதையின் உச்சத்திற்கு சென்றபோது மது பாட்டிலை உடைத்து சந்தோஷ்குமாரின் கழுத்தில் குத்தி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுங்கச்சாவடிகளை கடக்காமல் பல்வேறு கிராமங்களைச் சுற்றி கெடிலம் ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் சந்தோஷ்குமாரின் சடலத்தை வீசி பெட்ரோல் ஊற்றி எரித்தேன். ஊர் மக்கள் சந்தேகம் அடையாமல் இருக்க நானும் சென்று அவர்களுடன் சேர்ந்து தேடுவதைப்போல் நடித்தேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் முருகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.