கரோனா வைரஸ் மனித குலத்திற்கே கொடூர அரக்கனாக இருந்தாலும் ஒரு வகையில் கடந்த இரு மாதமாக அது நன்மை ஒன்றை செய்துள்ளது என்கிறார்கள் ஈரோடு மாவட்ட மக்கள் அது என்னவென்றால்..,
ஊரடங்கு என்ற பொதுமுடக்கத்தால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. தொழில் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சாய, சலவை ஆலைகளும், ரசாயன கெமிக்கல் தொழிற்சாலைகளும், தோல் தொழிற்சாலைகளும் உள்ளது. இந்த தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் எதையும் சுத்திகரிக்காமல் தொழிற்சாலை கழிவு நீராய், கூடுதலாக விஷக் கழிவு நீராகவும் மாறி அதை அப்படியே காவேரி ஆற்றிலும், காளிங்கராயன் வாய்க்காலிலும் வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது இந்த தொழிற்சாலைகள்.
ஊரடங்கு முடக்க காலத்தில் தொழிற்சாலைகள் செயல்படாததால் அதிலிருந்து விஷக் கழிவு நீர் வெளியேற்றப்படவில்லை. இதனால் சென்ற இரு மாதங்களாக காவிரி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் நீர் சுத்தமாக வந்தது. இப்போது ஈரோட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஈரோடு மாநகரை சுற்றியுள்ள சாய, சலவை, தோல் ஆலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பொதுமுடக்கத்தில் காவிரி ஆறு அதனுடைய இயல்பு நிலையை அடைந்து சுத்தமாக காட்சியளித்தது. மக்களுக்கு தேவையான குடிநீரும் சுத்தமாக வந்தது.
இப்போது சென்ற வாரத்திலிருந்து சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து விதிமுறைகளை மீறி கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே ஈரோட்டில் ஓடும் ஓடைகளில் திறந்து விட்டனர். இதனால், அனைத்து ஓடைகளிலும் சாய, சலவை, தோல் ஆலைகளின் கழிவு நீரே பெருமளவு ஓடியது. எந்த வகையிலும் சுத்திகரிப்பு செய்யாமல் காளிங்கராயன் வாய்க்கால், அருகே ஓடும் பிச்சைக்காரன் ஓடையில் நேரடியாக கலந்தது. இதனால், அப்பகுதி முழுக்க கழிவு நீர் செல்லும் பாதை எங்கிலும் நுரையுடன் சென்றது. இந்த விஷகழிவு நீர் பிச்சைக்காரன் ஓடையின் வழியாக காவிரி ஆற்றில் தான் கலக்கிறது. இதனால் காவிரி ஆறு அதிகளவில் மாசுபட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலைகளில் பெறப்படும் அன்பளிப்புகளால் அலட்சியமாக இருக்கிறார்கள். இதனால் தினந்தோறும் தொழிற்சாலைகளின் கழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய முறையில் ஆய்வு நடத்தி சாய,சலவை விஷ கழிவு நீரினை வெளியேற்றும் ஆலைகளின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.