டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இதில், அந்தந்த மாநிலங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அந்த அலங்கார ஊர்திகள் அமைந்திருக்கும். அந்தவகையில் இந்தாண்டுக்கான அலங்கார ஊர்தியைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியிருந்தது. ஆனால், மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மேற்குவங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்குவங்க அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் இதுதொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், " தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை. வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது. திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.