சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த சிலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. குடியரசு தின விழா முடிந்த பிறகு ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை' என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது ,
"தாய், தந்தை, ஆசானுக்கு
எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா?
அது சட்டமன்று; அறம்.
தமிழ்த்தாய் வாழ்த்தும்
அப்படியே
சட்டப்படியும்
எழுந்து நிற்கலாம்;
அறத்தின்படியும்
எழுந்து நிற்கலாம்.
இரண்டையும்
மறுத்தால் எப்படி?
தமிழ்த்தாய் மன்னிப்பாள்;
சட்டம்...?"