கெங்கவல்லி அருகே, சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, அரசுப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை, சித்தன்பட்டி குட்டையில் அரசுத் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த 23 குழந்தைகள் படித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த குயிலி (வயது 10, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியும் இப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை (ஜூன் 22) வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலையில் அழுதபடியே வீடு திரும்பினார்.
இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். பள்ளியில் என்ன நடந்தது என்று சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த அகஸ்டின் தங்கையா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், அவர் தன்னிடம் அத்துமீறுவதாகவும் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஊர் மக்களைத் திரட்டிக் கொண்டு, வியாழக்கிழமை (ஜூன் 23) பள்ளிக்கூடத்திற்குச் சென்று, ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவை தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது ஆசிரியர் அகஸ்டின், முன்னுக்குப் பின் முரணாகவும், மழுப்பலாகவும் பதில் அளித்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோரும், ஊர் மக்களும் ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், நிகழ்விடம் விரைந்து சென்று, தகராற்றை விலக்கி விட்டார். இந்த தாக்குதலில் அகஸ்டின் தங்கையா பலத்த காயம் அடைந்தார். அவர், கூடமலை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் தரப்பில் சிலர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் சமாதானம் ஆகவில்லை. அவர்கள் கெங்கவல்லி காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தனர். காவல்துறை விசாரணையில், சிறுமி குயிலி மட்டுமின்றி, அவருடைய உறவினர் ஒருவரின் 13 வயது சிறுமியிடமும் அகஸ்டின் தங்கையா பாலியல் ரீதியாக நடக்க முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த புகார், ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
காவல் ஆய்வாளர் தமிழரசி, ஆசிரியர் அகஸ்டின் தங்கையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே, அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அகஸ்டின் தங்கையா, தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. சொந்த ஊரான செந்தாரப்பட்டிக்குச் சென்று விசாரித்தபோது, அங்கேயும் ஆசிரியர் இல்லை என்பது தெரியவந்தது. அகஸ்டின் தங்கையாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.