தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதே தமிழக அரசியல் வட்டாரங்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இந்தநிலையில், நேற்று அஸ்ஸாமில் பேசிய மோடி, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, எப்போது அறிவிக்கப்படும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேசிய மோடி, "கடந்த முறை இந்த மாநிலங்களில், மார்ச் 4 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே இம்முறை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என யூகித்திருக்கிறேன். தேர்தல் ஆணையம் அதனை முறையாக அறிவிக்கும். தேர்தலுக்கு முன்பாக எத்தனை முறைமுடியுமோ அத்தனை முறை அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறேன். மார்ச் 7 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் தேதிகள் வெளியாகலாம். அதுவரை எனக்கு நிறைய நேரம் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் மார்ச் 7 ஆம் தேதி, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி வெளியாகும் என்பதை பிரதமர் மோடி மறைமுகமாக அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.