தமிழகத்தில் தனது இரண்டாவது கட்டப் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு, மூன்று நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை தமிழகம் வந்தடைந்தார். தென் மாவட்டங்களான, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள, இன்று தனி விமானம் மூலம் காலை 11.50 மணி அளவிற்கு தூத்துக்குடி வந்துசேர்ந்தார்.
இந்தநிலையில், தூத்துக்குடி மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, தமிழ் மொழி, பாரம்பரியம் உள்ளிட்டவை, இந்தியாவினுடையது அல்ல எனப் பிரதமர் கூறுகிறாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், "ஆர்.எஸ்.எஸ் & பாஜக தவிர அனைத்து சித்தாந்தங்களையும் பிரதமர் தாக்குகிறார். இந்தியா என்பது ஒரு பாரம்பரியம், ஒரு வரலாறு, ஒரு மொழி என்று அவர் கூறுகிறார். இதன்மூலம், அவர் தமிழ் மொழி, வரலாறு, பாரம்பரியம் ஆகியவை இந்தியாவினுடையது அல்ல எனக் கூற வருகிறாரா? ஒரு சித்தாந்தம் மற்ற எல்லாச் சித்தாந்தங்களையும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உப்பளத் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் செல்வப் பங்கீடு வளைந்து கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கீழ் நிலைமை மோசமடைந்துள்ளது. ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதிசெய்ய, நாங்கள் மீண்டும் அதிகாரத்தை அடைந்தவுடன் 'NYAY' (ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும்) திட்டத்தைக் கொண்டு வருவோம். அவர்கள் வறுமையிலிருந்து வெளிவரும் வரை இது தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.