சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று (18.06.2021) திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பாலியல் புகாரில் சுஷில்ஹரி பள்ளியின் 3 ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஏற்கனவே சுஷ்மிதா என்பவர் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தீபா என்ற மற்றொரு ஆசிரியை முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் போக்சோ சட்டத்தில் தேவையின்றி சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தீபா, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.