தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கலும் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைக் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி வேட்புமனு தாக்கல் செய்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண், ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வாக இருப்பது உறுதியாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் நாயக்கனேரி. மொத்தம் ஒன்பது வார்டுகளைக் கொண்ட இந்த ஊராட்சியில் தலைவர் பதவி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளர் தொகுதியாக ஒதுக்கப்பட்டது. அதனால் மற்ற சமுதாயத்தினருக்கு ஒதுக்க கோரி அங்கிருந்த மலைக் கிராம மக்கள் போராடிவந்தனர்.
ஆனால், மலைக்கிராம மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பியூலா, இந்துமதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிலும் குறிப்பாக, இந்துமதி வேட்புமனு தாக்கலின்போது கடைசி நேரத்தில் ஓடிச்சென்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது. வேட்புமனு பரிசீலனையின்போது பியூலாவின் மனு சரியான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. இந்துமதியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் எதிர் போட்டியாளர் இன்றி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வாகிறார் என்பது உறுதியாகியுள்ளது.