Published on 11/08/2021 | Edited on 11/08/2021
வரும் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த 9ஆம் தேதி வெளியிட்டிருந்தார். அதில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் பொதுசந்தா கடனாக ரூ. 2.63 லட்சம் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 5.24 லட்சம் கோடியாகவும், தமிழ்நாட்டின் மொத்த நிதிப் பற்றாக்குறை 92 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டதில்லை. கரோனா வருவதற்கு முந்தியே இந்த சரிவு தொடங்கிவிட்டது" என்று கூறப்பட்டிருந்தது.
வெளியான வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தன்மீதான கடனை அடைக்க காந்தி வேடத்தில் ஒருவர் காசோலையுடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் தியாகராஜன் என்பவர், காந்தியடிகள் வேடத்தில் கையில் 2,63,976 ரூபாய்க்கான காசோலையுடன் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆனால் கோட்டாட்சியர் கோட்டைகுமார், அந்தக் காசோலையை வாங்க மறுத்து அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற சமூக ஆர்வலரான ரமேஷ் தியாராஜன், நீண்ட நேரம் காத்திருந்தும் ஆட்சியர் வராததால் காசோலையைக் கொடுக்க முடியாமல் திரும்பினார்.