கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் என்.எல்.சி. இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன்புறம் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்று (01.09.2021) இரவு 7 மணி அளவில் வாலிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற நெய்வேலி டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் மந்தாரக்குப்பம் போலீசார் அருண், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நெய்வேலி மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகன் அருண் (எ) அருண்குமார் (35) என்பது தெரியவந்தது. இவரது மனைவி ரம்யா 9 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருண் கோர்ட்டில் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த இவர், சிவகங்கை மாவட்டத்தில் தனியார் வாட்டர் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், மந்தாரகுப்பத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தவரை மர்ம கும்பல் கழுத்தை அறுத்தும், வெட்டியும் படுகொலை செய்தது தெரியவந்தது. மேலும், எதனால் கொலை நடைபெற்றது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.