Published on 10/04/2021 | Edited on 10/04/2021
தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் (08.04.2021) தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. அதில், கோயம்பேட்டில் சிறு கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் சிறு கடை வியாபாரிகள், ஊழியர்கள், உரிமையாளர்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது தற்காலிகமாக சிறு கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறு கடைகளை சுழற்சி முறையில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் மொத்தம் 1,800க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் உள்ள நிலையில், ஒருநாள் 900 கடைகளும், மறுநாள் 900 கடைகளும் என சுழற்சி முறையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.