Permission for New Year celebration with restrictions in Puduvai ... Court order!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத்தடை இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

ஒமிக்ரான், கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்துள்ளன. எனினும், புதுச்சேரியில் நிபந்தனைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட நண்பர்கள், குடும்பத்தினருடன், அங்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக, புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், ஜெகநாதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "ஒமிக்ரான் காரணமாக, அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் புதுச்சேரிக்கு படையெடுத்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே இரண்டு பேருக்கு ஒமிக்ரான் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, மற்ற மாநிலங்களைப் போல், புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத்தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (29/12/2021) மதியம் அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வு அறிவித்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை அதேவேளையில், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை. பொது இடங்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பங்கேற்கக்கூடாது. தனி இடங்களில் பங்கேற்கலாம். டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் 1 மணி வரை மதுபான விற்பனைக்குத் தடை. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மதுபானக்கடை, பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் மதுவிற்பனை கூடாது. பொதுஇடங்களில் மது அருந்தக்கூடாது. விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தாங்கிக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டு வழக்கு ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment