பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலட், ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15/10/2021) கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்திடவும், மாண்பமை உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் டெல்லி, ஒடிஷா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி அன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசு உற்பத்தியாளர்களின் நலன் கருதி உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை விரைவில் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.