தமிழகத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் நடைபெற இருக்கும் சேவல் சண்டைக்கு தடைவிதிக்காக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சாதாரண சேவல் சண்டை என அனுமதிபெற்றுவிட்டு சேவலின் காலில் கத்தியைக் கட்டி சட்டத்திற்குப் புறம்பாக சேவல் சண்டை நடத்தப்படுகிறது. இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பதால் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது' என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்யநாதன், ஜெயசந்திரன் அமர்வு, தமிழகத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட்டதோடு, சேவல் சண்டை நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?, கரோனா அதிகரித்து வரும் சூழலில் சேவல் சண்டைக்கு அனுமதி கொடுத்தது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.