Skip to main content

பட்டியலினத்தவர்களுக்கு முடிவெட்டுவதில்லை... கோட்டாட்சியரிடம் ஆதங்கத்தை கொட்டிய மக்கள்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

பர

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கடைகளில் பட்டியல் இனத்தவர்களுக்கு முடிவெட்டுவதில்லை என்ற தீண்டாமை தொடர்வதாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பவம் உண்மையா? என்பதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் 4 வாரத்தில் பதில் கேட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் நாங்கள் யாரையும் ஒதுக்குவதில்லை என புதுப்பட்டி முடி திருத்தும் கடைகாரர்களும் நாங்கள் முடிவெட்ட போவதில்லை என்று பலரும் கூறியிருந்தனர். மேலும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளருமான தோழர் சின்னத்துரை, "எனக்கே அந்த கொடுமை நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு வந்த வருவாய் துறை அதிகாரி முன்னிலையிலேயே தனி குவளையில் தான் டீ கொடுத்தார்கள். ஆனால் சம்வத்தை நேரில் பார்த்த வருவாய் துறை அதிகாரி தீண்டாமை இல்லை என்று அறிக்கை கொடுத்தார்" என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் வருத்தத்துடன் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா சம்மந்தப்பட்ட சிலரை அழைத்து விசாரித்த போதும் தீண்டாமை இல்லை என்பதையே எழுதிக் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை கோட்டாட்சியர் அபிநயா மற்றும் வருவாய்த்துறை, காவல் துறை, நீதித்துறையினருடன் புதுப்பட்டி கிராமத்திற்குச் சென்று நேரில் விசாரித்த போது.... காலங்காலமாக முடிவெட்டுவதில்லை, துணிகளை தேய்த்து கொடுப்பதில்லை என்ற தீண்டாமை தொடர்கிறது. அதிகாரிகள் வந்தால், அன்று ஒருநாள் முடிவெட்டுவார்கள் அடுத்த நாளே பழையபடி மாறிவிடுவார்கள். அதனால் எங்களுக்கு தற்காலிக தீர்வு வேண்டாம், நிரந்தர தீர்வு வேண்டும் என்று கூறியுள்ளனர். இவர்களது கருத்துகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவும் புதுப்பட்டி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்