தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் (08.04.2021) தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. திருவிழா, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு எட்டு மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்ததால், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடக்கவிருந்த திருவிழாவை இன்று அதிகாலையே நடத்தி முடித்திருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் வருடா வருடம் பங்குனி அமாவாசையை முன்னிட்டு, பூமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இந்த திருவிழா கரோனா பொதுமுடக்கம் காரணமாக நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வருடம் திருவிழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் தமிழக அரசு திருவிழாக்களுக்குத் தடை விதித்தது. இந்நிலையில், நாளை நடைபெற இருந்த திருவிழா இன்று அதிகாலையே நடத்தப்பட்டது.