கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகில் உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(50). விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி(43). இத்தம்பதியின் மகள் பவானி(24), திருமணமாகி மேலநிம்மேலி என்ற கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இவர், இரு தினங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து முகத்தை துணியால் மூடிக்கொண்டு பவானியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கழட்டி தரும்படி மிரட்டியுள்ளார். ஆனால் பவானி, தன் நகையை தர மறுத்து கொள்ளையனுடன் போராடியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த அவரது தாயும், மகளை கொள்ளையனிடமிருந்து மீட்பதற்கு போராடி உள்ளார். ஆனாலும், பவானி கழுத்தில் இருந்த எட்டு பவன் தாலி செயினை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடினார். அதன்பிறகு பவானி வீட்டார் இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதேபோல், நெல்லிக்குப்பம் அருகில் உள்ள சித்தரசூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், மகேஸ்வரி தம்பதி. இதில் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தன் சொந்த ஊருக்கு வந்து மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி இவர்களது மூத்த மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி முடித்து உள்ளனர். இந்த நீராட்டு விழாவிற்கு வந்த உறவினர்கள் சீர்வரிசையாக தந்த தங்க நகைகள் பத்து சவரன், ரொக்க பணம் ஒரு லட்சம் ஆகியவற்றை வீட்டில் உள்ள அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். மீண்டும் ஊரில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது பூட்டியிருந்த மகேஸ்வரியின் வீடு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கே வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து மகேஸ்வரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை நபர்கள தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதே போல் விருத்தாசலம் அருகில் உள்ள பெரிய வடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவர், விருத்தாசலத்தில் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், விருத்தாசலம் மங்கலம்பேட்டை சாலையில் உள்ள பெரிய வடவாடி பஸ்-ஸ்டாப் அருகே தனியே வீடு கட்டி வசித்து வருகிறார்கள். கடந்த 30ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்பு இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 14 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நவீன் குமார் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இது போன்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களால் கடலூர் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.